Friday, May 7, 2010

வேதனையின் வலியெல்லாம்...

உள்மனமோ உனை நாட
ஏமாற்றத்தை அறிவுணர
கண்களும் எனை மீறி
கண்ணீர் சிந்த நானழுதேன்!

உனையே என் உறவென்றும்
உன்னாலே என் மகிழ்வென்றும்
வலம் வந்த தருணமெல்லாம்
வேதனையாய் வலிக்கிறது!

தனிமை எனக்குப் புதிதல்ல
வேதனையும் புதிதல்ல
வேதனையின் வலியெல்லாம்
வரிகள் ஆவதும் புதிதல்ல!

Thursday, May 6, 2010

சக்கரம் சுழல்கிறது

சக்கரம் சுழல்கிறது
சப்தங்களின் சாலையில்;
சப்தத்தின் நிசப்தத்தில்
இசையொன்று கசிந்தது;
இசையின் ஈர்ப்பிற்கு
சக்கரம் திரும்பியது;
நிசப்தத்தின் இசையைத்தேடி
சக்கரம் சுழல்கிறது!

நினைவில் இசையோடு
நெடுந்தூரம் கடந்தது;
சப்தங்கள் நிசப்தமாகி
இசை சூழ்ந்துக்கொண்டது;
அருகினில் நெருங்க நெருங்க
இசையெல்லாம் சப்தமாக
சப்தமெல்லாம் நிசப்தமானது
நினைவினில் இசையோடு!!