Thursday, April 19, 2012

தேடல்

மனதின் உள்ளே
உறங்கும் ஏக்கம்
இரவின் தனிமையில்
தலையணை நனைக்க
ஒவ்வொரு துளியும்
உன்முகம் தாங்கி
மேலும் கொன்றால்
என்செய்வேன் நானும்..

தூரத்தில் தெரிகிறாய்
கானல் நீரென
உணர்ந்தது அறிவு
மறுக்கிறது மனம்
கிட்டா முடிவினைத்
தேடிச் செல்கிறேன்
இல்லாத பாதையில்
அனைத்தும் அறிந்தும்..

இரவும் விடியலும்
என்றும் போல்தான்
உன் நினைவோடுறங்கி
உன் நினைவோடு எழுகிறேன்;
எனினும் ஒரு மாற்றம் -
அன்றெல்லாம் மனது
பறவையென பறக்க
முகமதனில் என்றும்
மகிழ்வுடன் கூடிச்சிரிப்பு
இன்றோ என்னுள்ளே
இனம்புரியா கனமொன்று
என்றும் குடிகொண்டு
என் சிரிப்பைக் கொல்கிறது;
சுகமான நினைவெல்லாம்
சுமையாகி வதைக்கிறது ;
வதைதேன்னைக் கொன்றாலும்
மனம் தேடுவது உனையேதான்..

கண்ணீரும் கனக்கிறதே



மனதின் கனத்தை
கண்நீரெனக் கரைப்பேன் உன்னிடமே - இன்று
கண்ணீரும் கனக்கிறதே
காரணம் நீயானதால்...

விடுதியின் நார்சுவருள்

ஐந்து பத்து

மாலைப் பொழுது

பசியின் மயக்கமும்

பரீட்சையின் களைப்பும்

சொக்கி இழுக்கினும்

ஐந்தொரு நிமிடமாவது

அரட்டையில் மூழ்கிபின்

வீட்டுக்குத் திரும்ப

கையில் காப்பியுடன்

பசிக்குப் புசிக்கப்

பண்டமும் வைத்துக்

காத்திருக்கும் அம்மா;


பசிதீர உண்டு

புத்தகத்தை நினைக்க

உண்ட மயக்கமும்

பயமும் கலந்து

கண்ணைச் சொருக

கட்டிலில் சாய

அனுபவித்த சொர்கமும்;


"சாப்பிட்டு படுடா"

அப்பாவும் அம்மாவும்

மாறி மாறி எழுப்ப,

எழுந்தும் எழாமல்

வம்பிழுக்கும் தம்பி;


வம்பின் எரிச்சலும்

தூங்கிய களைப்பும்

படிப்பின் ஞாபகம்

விழுங்கிய தோசையும்

தொண்டைக் குழியை அடைக்க

கண்ணில் வரும் நீரும்;


இரவின் குளிரும்

அந்தப் பால்கனியும்

அச்சுறுத்தும் பக்கங்களும்

வீணடித்த நிமிடங்களும்

அன்றெல்லாம் கனத்தாலும்

விடுதியின் நார்சுவருள்

இன்று எண்ண இனிக்கிறது..